திண்டுக்கல்லில் இருந்து வடமாநிலங்களுக்கு மாதந்தோறும் 10 டன் ஏலக்காய் ஏற்றுமதி
திண்டுக்கல்லில் இருந்து ரெயில் மூலம் மாதந்தோறும் 10 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இருந்து ரெயில் மூலம் மாதந்தோறும் 10 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி
தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஏலக்காய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் ஏலக்காய் தரம் பிரிக்கப்பட்டு தரமான ஏலக்காய், வெளிநாடுகள் மற்றும் வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை தேனி மாவட்டம் போடியில் இருந்து ஏலக்காய் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஏலக்காய்கள் தரமாக இருப்பதால் வடமாநிலங்களில் நல்ல கிராக்கி உள்ளது. எனவே ஒடிசா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தேனி மாவட்டம் போடி சந்தையில் இருந்து லாரிகள் மூலம் மதுரை மற்றும் திண்டுக்கல் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ரெயில்களில் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
10 டன் ஏலக்காய்
அந்தவகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மாதந்தோறும் 2 ரெயில்களில் ஏலக்காய் மூட்டைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 750 கிலோ முதல் ஒரு டன் வரை ஏலக்காய்கள் ரெயிலில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்காக ஏலக்காய்களை ஒரு கிலோ அளவுக்கு பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு, பல பாக்கெட்டுகள் ஒரு மூட்டையாக கட்டப்படுகிறது. மேலும் சேதம் அடைந்து விடாத வகையில் சாக்குமூட்டையில் அடைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் ரெயில்வே நிர்வாகத்துக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.