குன்னத்தூரில் சுடுகாடு அருகே கோவில் கோபுர கலசங்கள் 3 கிடந்தன

குன்னத்தூரில் சுடுகாடு அருகே கோவில் கோபுர கலசங்கள் 3 கிடந்தன

Update: 2021-07-13 16:30 GMT
குன்னத்தூர்:
குன்னத்தூரில் சுடுகாடு அருகே கோவில் கோபுர கலசங்கள் 3 கிடந்தன. இதனை வீசிச்சென்ற மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவில் கோபுர கலசங்கள்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே தொரவலூர் ரோடு எடையபாளையம் சுடுகாடு அருகே கோவில் கோபுர கலசங்கள் 3 ஒரு மரத்தடியில் கிடந்தன. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து எடையபாளையம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே ஊராட்சி தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சித்தலைவர் தங்கவேலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கோவில் கோபுர கலசங்களை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து குன்னத்தூர் போலீசாருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுத்தனர். 
போலீஸ் விசாரணை
தகவல் அறிந்ததும், குன்னத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவசியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் கோபுர கலசங்கள் 3-யும் கைப்பற்றி பாதுகாப்பாக குன்னத்தூர் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். தாமிரத்தால் ஆன கோபுர கலசங்கள் 3-ம் சுமார் 2 கிலோ எடை கொண்டவை ஆகும்.
கோவில் கலசங்களை யாராவது மர்ம ஆசாமிகள் கோவில்களில் இருந்து திருடி வந்து இங்கு போட்டுவிட்டு சென்றார்களா?  என்ற கோணத்தில் குன்னத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்