திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் ஒரு வாரம் தொடர்ந்து பணியாற்றினால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்

திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் ஒரு வாரம் தொடர்ந்து பணியாற்றினால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்

Update: 2021-07-13 16:27 GMT
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் ஒரு வாரம் தொடர்ந்து பணியாற்றினால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் பனியன் நிறுவன உரிமையாளர்கள் நூதன விளம்பரம் செய்து அறிவிப்பு பலகை வைத்தனர்.
பின்னலாடை நிறுவனங்கள்
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திருப்பூரில் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது. ஊரடங்கையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் சென்றனர்.
அதன்பிறகு பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியதும் திருப்பூரை நோக்கி தொழிலாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 80 சதவீத தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகிறார்கள்.
வித்தியாசமான விளம்பரம்
தொழிலாளர்களின் தேவை அதிகம் உள்ளது. இந்த நிலையில் தங்கள் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை வரவழைப்பதற்காக பனியன் உற்பத்தியாளர்கள் பல்வேறு விளம்பரங்கள் மற்றும் உத்திகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் திருப்பூர் அருகே வாவிபாளையத்தைச் சேர்ந்த பனியன் நிறுவன பவர் டேபிள் காண்ட்ராக்டர்களான மதுரையை சேர்ந்த ஈஸ்வரன், திருப்பூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் இருவரும் இணைந்து வித்தியாசமான விளம்பர பலகையை திருப்பூர் பகுதிகளில் வைத்திருந்தனர். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
2 லிட்டர் பெட்ரோல் இலவசம்
அதாவது தங்கள் நிறுவனத்தில் பீஸ்ரேட் அடிப்படையில் ஓவர்லாக் தையல் எந்திர டெய்லர்கள் தேவை எனவும் ஒரு வாரம் முழுமையாக வேலை செய்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்றும் எழுதி தங்களது செல்போன் எண்களையும் குறிப்பிட்டு விளம்பரங்களை மரங்கள், மின்கம்பங்களில் தொங்க விட்டுள்ளனர்.
வாவிபாளையம், நெருப்பெரிச்சல், பூலுவப்பட்டி நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் வைத்திருந்தனர். இதைக்கண்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் அவர்களுக்கு போன் செய்ததாகவும், தற்போது தங்களுக்கு தேவையான பணியாளர்கள் கிடைத்துவிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தொழிலாளர்களை ஈர்க்க...
பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102-ஐ தாண்டி விட்டது. இதனால் தொழிலாளர்கள் நிறுவனங்களுக்கு தங்களது வாகனங்களில் வந்து செல்வதில் தயக்கம் காட்டி வருகிறார்கள். அதனால் தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்