ஓசூர் அருகே அடுத்தடுத்து 2 பேரிடம் செல்போன், மோட்டார் சைக்கிள் பறிப்பு-2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூர் அருகே அடுத்தடுத்து 2 பேரிடம் செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்,
ஓசூரை அடுத்த கொல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 24). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் சம்பவத்தன்று இரவு கொல்லப்பள்ளி-தொரப்பள்ளி சாலையில் நின்றபடி செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கிருஷ்ணனை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற தொரப்பள்ளியை சேர்ந்த பள்ளிவாசல் இமாம்மான அப்துல் ரசீத் (41) என்பவர் வாலிபர்களுக்கு உதவுவதற்காக தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
வலைவீச்சு
பின்னர் அவர், அந்த வாலிபர்கள் அருகே சென்றபோது, அவர்கள் அப்துல் ரசீத்தை கீழே தள்ளி விட்டு, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.