தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொட்டில் குழந்தை திட்ட வரவேற்பு மையம் மீண்டும் தொடக்கம்
தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொட்டில் குழந்தை திட்ட வரவேற்பு மையம் நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
தர்மபுரி,
தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொட்டில் குழந்தை திட்ட வரவேற்பு மையம் நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
தொட்டில் குழந்தை திட்டம்
தமிழகத்தில் பெண் சிசு கொலையை தடுக்க 1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்டது. தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொட்டில் குழந்தை திட்ட வரவேற்பு மையம் சமூக நலத்துறை சார்பில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. குழந்தைகளை வளர்க்க இயலாத பெற்றோர் தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தில் அந்த குழந்தைகளை ஒப்படைப்பது வழக்கம்.
இந்த குழந்தைகளை சிறப்பான முறையில் பராமரித்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அண்மைக்காலமாக இந்த தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் செயல்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் கீதாஜீவன் தொட்டில் குழந்தை திட்ட வரவேற்பு மையம் தர்மபுரியில் மீண்டும் செயல்பட உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மீண்டும் தொடக்கம்
இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேவை மைய கட்டிடத்தில் தொட்டில் குழந்தை திட்ட வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்த மையத்தை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இந்த வரவேற்பு மையம் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் அமைக்க வேண்டும். இங்கு குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் அலுவலக முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் அச்சிடப்பட்ட தகவல் பலகை அமைக்க வேண்டும். இந்த மையத்தில் ஒப்படைக்கப்படும் குழந்தைகளை முறையாக பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) நாகலட்சுமி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, குழந்தைகள் சிகிச்சை பிரிவு தலைவர் ரமேஷ்பாபு, கண்காணிப்பு மருத்துவ அலுவலர் சிவக்குமார், டாக்டர் பாலாஜி மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.