உடன்குடியில் 7 மாத கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம்பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்

உடன்குடியில் 7 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்தார். இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2021-07-13 13:12 GMT
உடன்குடி:
உடன்குடியில் 7 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்தார். இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
7 மாத கைக்குழந்தை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி செல்வா சிட்டி பகுதியை சேர்ந்தவர் பேச்சித்தாய் (வயது 30). இவருக்கும், நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த நம்பி ராஜா என்பவருக்கும் திருமணம் நடந்தது. 
நம்பிராஜா மும்பையில் ஓட்டல் நடத்தி வருகிறார். திருமணத்துக்கு பின் கணவருடன் பேச்சித்தாய் வசித்து வந்தார். கர்ப்பிணியான பேச்சித்தாய் பிரசவத்துக்காக செல்வாசிட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். இவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சுபாஷ் பிரபாகர் என குழந்தைக்கு பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்தவுடன் கணவர் வீட்டுக்கு பேச்சித்தாயை அனுப்பி வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
கிணற்றில் குதித்தார்
இந்த நிலையில் பேச்சிதாய்க்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டதால் கணவர் வீட்டுக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர். நேற்று கைக்குழந்தையுடன் வெளியே சென்ற பேச்சித்தாய் அருகில் உள்ள செவல்விளைபுதூரில் ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் திடீரென்று குதித்துள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று கிணற்றில் இருந்து குழந்தையுடன் பேச்சித்தாயை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
உடனடியாக 2 பேரையும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுபாஷ் பிரபாகர் பரிதாபமாக இறந்து போனான். ஆபத்தான நிலையில் பேச்சித்தாய் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து உடன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்