பணத்தை திருப்பி கேட்டதால் துப்பாக்கியை காட்டி மிரட்டல்; திருவள்ளூரில் கூலிப்படையினர் கைது
ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்டதால் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக 4 பேர் கைதாகினர்.
ரெயில்வே துறையில் வேலை
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் லியோ தாமஸ் பீட்டர். இவர் தனது உறவினர்களான சிவசக்தி, செல்வராஜ், பிரவீன் குமார் ஆகியோருக்கு ரெயில்வே துறையில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போகிபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 28) என்பவர் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சத்தை லியோ தாமஸ் பீட்டரிடம் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீநாத், 3 பேருக்கும் ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி
வந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் 4 பேரும் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர்.பணத்தை திருப்பி தராததால், திருச்சியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஸ்ரீநாத் மீது மோசடி புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
கூலிப்படையினருடன் மிரட்டல்
இந்த நிலையில் லியோ தாமஸ் பீட்டர் தனது உறவினர்களுடன் சென்று ஸ்ரீநாத்திடம் தங்கள் பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள சீனிவாசன் என்பவரிடம் சென்று வாங்கிகொள்ளுமாறு கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து அவர்கள் அரக்கோணம் சென்று விசாரித்த போது, அங்கு சீனிவாசன் என்பவர் இல்லை என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து லியோ தாமஸ் பீட்டர், ஸ்ரீநாத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே இருப்பதாக கூறி அங்கு வருமாறு தெரிவித்துள்ளார்.இதனைத்
தொடர்ந்து லியோ தாமஸ் பீட்டர் தனது உறவினர்கள் 3 பேருடன் நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த நிலையில் அங்கு காரில் கூலிப்படையினருடன் பதுங்கியிருந்த ஸ்ரீநாத் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் லியோ தாமஸ் பீட்டர் தரப்பினரை மிரட்டி உள்ளனர்.
4 பேர் கைது
இச்சம்பவத்தை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது போலீசார் விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஸ்ரீநாத் மற்றும் கூலிப்படையை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஜே.ஜே. நகரை சேர்ந்த ராஜேஷ் எபினேசர் (41), சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (50), கிருஷ்ணகிரியை சேர்ந்த அரசு (34) என தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, 13 தோட்டாக்கள், கத்தி மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.