தியாகராயநகரில் ஜெ.ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை தியாகராயநகரில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை,
விடுமுறை தினமான நேற்று முன்தினம் பொருட்கள் வாங்க அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ரங்கநாதன் தெருவில் எங்கு பார்த்தாலும் மக்களின் தலைகளாகவே காட்சியளித்தது. பொருட்களை வாங்கும் ஆர்வத்தில் கொரோனா அச்சம் துளியும் இன்றி சமூக இடைவெளி உள்பட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற தவறிவிட்டனர்.
இந்தநிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தியாகராயநகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் அணிந்து கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பொருட்கள் வாங்குவதற்காக வரும் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்றும், சுகாதாரம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கடை உரிமையாளர்களும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
அப்போது மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தியாகராயநகர் சுகாதார அதிகாரிகள் சீனிவாசன், பிரபு, ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க செயலாளர் சாகுல் ஹமீத் ஆகியோர் இருந்தனர்.