விவசாயிகள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
பெரம்பலூர்:
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் மண் சட்டியை திருவோடாக ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பாலக்கரையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் சாகுபடி செய்த மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை கொண்டு சென்றால், அவற்றை அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேரம் பேசிக்கொண்டு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால், அங்கு விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். நெல் கொள்முதல் செய்வது போல் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை கொள்முதல் நிலையங்களை அமைத்து தமிழக அரசு கொள்முதல் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் உரம் விற்பனை செய்பவர்கள் மீதும், போலி உரம், மருந்து, விதைகளை விற்பனை செய்பவர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகளை அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு விவசாயிகள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பான மனுவினை வழங்கினர்.