ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்; கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் கைது

‘சிக்கன் கிரேவி’ தராததாக கூறி தகராறில் ஈடுபட்டு ஓட்டல் உரிமையாளரை தாக்கியது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-12 22:43 GMT
செந்துறை:

வாக்குவாதம்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மகன் செந்தில்(வயது 35). இவர் செந்துறை ரேஷன் கடை எதிரே ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அந்த ஓட்டலுக்கு வந்த உஞ்சினி கிராமத்தை சேர்ந்த வஞ்சினபுரம் கிராம நிர்வாக அலுவலர் சர்ஜித்(28), ரொட்டி மற்றும் ‘சிக்கன் கிரேவி’ பார்சல் கேட்டுள்ளார். அதனை ஓட்டல் ஊழியர்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் பார்சலுடன் அங்கிருந்து சென்றார்.
இந்த நிலையில் மீண்டும் சர்ஜித் ஓட்டலுக்கு வந்து பார்சலில் சிக்கன் கிரேவி தரவில்லை என்று கூறியுள்ளார். அப்போது அவருக்கும், செந்திலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை செந்தில் காட்டியுள்ளார். பின்னர் மீண்டும் சிக்கன் கிரேவி கொடுத்ததாக தெரிகிறது.
கைது
இதையடுத்து அங்கிருந்து சென்ற சர்ஜித், உஞ்சினி கிராமத்தை சேர்ந்த தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் மீண்டும் ஓட்டலுக்கு வந்தார். அங்கு செந்திலிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியதோடு சாலையில் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து செந்தில் செந்துறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சர்ஜித், அவரது சித்தப்பா அறிவழகன்(47), அண்ணன் ரஞ்சித்(31) ஆகிய 3 பேரை கைது செய்து செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்