மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
ஆலங்குளத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஆலங்குளம்:
ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் ஆலங்குளம் - அம்பை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் அம்பை கோட்டாரங்குளத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் ராஜ்குமார் (39), முருகன் மகன் சிதம்பரம் என்ற கட்ட கார்த்தி (19), ராமகிருஷ்ணன் மகன் சிவலிங்கம் என்ற கார்த்திக் (21) என்பதும், அவர்கள் வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஆலங்குளம், தென்காசி, சுரண்டை, பாவூர்சத்திரம், மதுரை, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும், அவற்றை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்ற 20 திருட்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.