பகுதிநேர ரேஷன் கடை தொடங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

சங்கரன்கோவில் அருகே பகுதிநேர ரேஷன் கடை தொடங்க வேண்டும் என்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.;

Update: 2021-07-12 22:15 GMT
தென்காசி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடத்தப்படவில்லை. இதையொட்டி அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர். சிவகிரி தாலுகா திருமலாபுரம் கிராம மக்கள் அளித்த மனுவில், ‘எங்களது ஊரில் முறைகேடாக மது விற்பனை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.

புளியரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி அமுதா கொடுத்துள்ள மனுவில், ‘எனது கணவர் கொரோனாவால் இறந்ததால், 2 குழந்தைகளுடன் ஏழ்மையில் வசித்து வருகிறேன். எனவே அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.

சங்கரன்கோவில் தாலுகா நடுவக்குறிச்சி மைனர் கிராமம் சூரங்குடி பகுதி மக்கள் வழங்கிய மனுவில், ‘எங்களது ஊரில் ரேஷன் கடை இல்லாததால் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று உணவுப்பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. எனவே சூரங்குடியில் பகுதி நேர ரேஷன் கடை தொடங்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.

மேலும் செய்திகள்