6 யூனியன்களில் பிறப்பு விகிதம் அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் 6 யூனியன்களில் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
நெல்லை:
உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நெல்லை கலெக்டர் அலுலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பரிசுகள் வழங்கியதுடன், விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெருகி வரும் மக்கள்தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மக்கள் விழிப்புணர்வு பெற ஆண்டுதோறும் ஜூலை 11-ந்தேதி உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2011-ல் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். தற்போது உத்தேசமான மக்கள்தொகை 8.22 கோடியாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தற்போதைய உத்தேச மக்கள் தொகை 20 லட்சத்து 58 ஆயிரத்து 372 ஆகும். இங்குள்ள 9 யூனியன்களில் நாங்குநேரி, ராதாபுரம், சேரன்மாதேவி, வள்ளியூர், களக்காடு, பாப்பாகுடி ஆகிய 6 யூனியன்களில் உயர்வரிசை பிறப்பு மாவட்ட சராசரி அளவை விட அதிகமாக காணப்படுவதால், இந்த 6 யூனியன்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
குடும்ப நல திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி அதன் விளைவாக தமிழ்நாட்டில் (2018) பிறப்பு விகிதம் 14.7 ஆகவும், இறப்பு விகிதம் 6.5 ஆகவும், சிசு மரண விகிதம் 15.0 ஆகவும், உயர் வரிசை பிறப்பு விகிதம் 7.2 ஆகவும் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் தற்போது (2020) பிறப்பு விகிதம் 11.5 ஆகவும், இறப்பு விகிதம் 4.9 ஆகவும், சிசு மரண விகிதம் 7.8 ஆகவும், உயர் வரிசை பிறப்பு விகிதம் 8.2 ஆகவும் உள்ளது.
தற்போதைய கொரோனா பரவல் காரணமாக, மிகவும் நெருக்கடியான காலத்திலும் பச்சிளம் குழந்தையையும், கர்ப்பிணி தாய்மார்களையும் பாதுகாப்பதில் மிகுந்த கவனத்தோடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை பணியாற்றி வருகிறது. அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும், தற்காலிக குடும்ப நல முறைகளான, காப்பர்-டி, மாத்திரை, ஆணுறை, சாயா எனும் வாராந்திர மாத்திரை, 3 மாதத்திற்கு ஒருமுறை பெண்கள் போட்டுக் கொள்ளும் அந்தாரா எனும் கருத்தடை ஊசி போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு, நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) நெடுமாறன், துணை இயக்குனர்கள் ராமநாதன் (மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்), வரதராஜன் (சுகாதார பணிகள்), வெள்ளைச்சாமி (காசநோய்) ஆகியோர் முன்னிலையில், அனைத்து செவிலியர்களும் உலக மக்கள்தொகை தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.