பெண் கழுத்தை நெரித்துக்கொலை; தாய்-தங்கை கைது

மூலைக்கரைப்பட்டி அருகே பெண் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தாய்-தங்கையை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-07-13 01:59 IST
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மேல முனைஞ்சிப்பட்டி முத்துவீரப்பபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 62). இவர் ஜவ்வு மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி முருகம்மாள் (60). இவர்களுக்கு சேர்மக்கனி (35), அருணாசலம் (32) உள்ளிட்ட 4 மகள்களும், சிவன் சுடலை என்ற மகனும் இருந்தனர். சேர்மக்கனிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு திருமணமாகவில்லை. மற்ற 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. சேர்மக்கனி பெற்றோருடன் சேர்ந்து மாடுகளை வளர்த்து வந்தார்.

நேற்று காலையில் சேர்மக்கனிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக கூறி, அவருடைய குடும்பத்தினர் இறுதிச்சடங்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். இதில் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சேர்மக்கனியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அதன் விவரம் வருமாறு:-

சேர்மக்கனிக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தாய் முருகம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அவர், இதுகுறித்து 2-வது மகள் அருணாசலத்துக்கு தெரிவித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் அருணாசலம் தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்து சேர்மக்கனியிடம் விசாரித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருணாசலம், தாய் முருகம்மாள் ஆகிய 2 பேரும் சேர்ந்து சேர்மக்கனியின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் சேர்மக்கனி உயிரிழந்தார்.

பின்னர் காலையில் சேர்மக்கனிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக கூறி நாடகமாடிய அவர்கள், சேர்மக்கனியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து முருகம்மாள், அருணாசலம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சேர்மக்கனியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்