செல்போன் சிம் கார்டை புதுப்பிக்க கூறி முதியவர் வங்கி கணக்கில் ரூ.27 லட்சம் எடுத்து மோசடி

பெங்களூருவில் செல்போன் சிம்கார்டுவை புதுப்பிக்க கூறி முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.27 லட்சத்தை எடுத்து மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2021-07-12 20:26 GMT
பெங்களூரு: பெங்களூருவில் செல்போன் சிம்கார்டுவை புதுப்பிக்க கூறி முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.27 லட்சத்தை எடுத்து மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகிறார்கள்.

சிம் கார்டை புதுப்பிக்க...

பெங்களூரு பானசாவடி அருகே 80 வயது முதியவர் வசித்து வருகிறார். அவரை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ‘‘உங்களது செல்போன் சிம் கார்டு காலாவதியாகி விட்டது,  அதனை புதுப்பித்து கொள்ளுங்கள், இல்லையெனில் சிம் கார்டு மற்றும் வங்கி கணக்கு முடக்கப்பட்டு விடும்’’ என்று முதியவரிடம் அந்த நபர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த முதியவர், தன்னுடைய சிம் கார்டை புதுப்பிக்க விரும்புவதாக அந்த நபரிடம் கூறியுள்ளார். இதற்காக அந்த நபர் கேட்ட அனைத்து தகவல்களையும், தன்னுடைய வங்கி கணக்கு விவரங்களையும் முதியவர் கூறினார். மேலும் தன்னுடைய செல்போனுக்கு வந்த தகவல்களையும், மர்மநபரின் செல்போனுக்கு முதியவர் அனுப்பி வைத்துள்ளார்.

ரூ.27 லட்சம் மோசடி

சிறிது நேரத்தில் முதியவரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.27 லட்சம் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் எடுக்கப்பட்டு இருப்பதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல்கள் வந்தது. இதை பார்த்து அந்த முதியவர் அதிர்ச்சி அடைந்தார். செல்போன் சிம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி அந்த மர்மநபர் தனது வங்கி கணக்கின் தகவல்களை பெற்று, ரூ.27 லட்சத்தை எடுத்து மோசடி செய்திருப்பதை முதியவர் உணர்ந்தார்.

இதுகுறித்து கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் முதியவரின் மகன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்