கோலார் தங்கவயலில் பஸ் நிலைய பெயர் மீண்டும் தமிழில் எழுதப்பட்டது

கோலார் தங்கவயலில் உள்ள நகரசபை பஸ் நிலையத்தின் பெயர் மீண்டும் தமிழில் எழுதப்பட்டது. தமிழர்களுடனான ஒற்றுமை தொடர வேண்டுமென கன்னட அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-07-12 20:14 GMT
கோலார்: கோலார் தங்கவயலில் உள்ள நகரசபை பஸ் நிலையத்தின் பெயர் மீண்டும் தமிழில் எழுதப்பட்டது. தமிழர்களுடனான ஒற்றுமை தொடர வேண்டுமென கன்னட அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தமிழ் எழுத்துக்கள் அழிப்பு

பெங்களூருவை சேர்ந்த கன்னட அமைப்பினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலுக்கு வந்தனர். அப்போது நகராட்சி பஸ் நிலைய நுழைவு வாயிலில் இருந்த தமிழ் எழுத்துக்களை கருப்பு பெயிண்ட் பூசி அழித்தனர். அதாவது பஸ் நிலையத்தின் பெயர் அங்கு கன்னடம், ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப்பட்டு இருந்தது. அதில் தமிழ் எழுத்துக்களை மட்டும் அவர்கள் அழித்தனர்.

கன்னட அமைப்பினரின் இந்த செயலுக்கு தங்கவயலில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மட்டும் இன்றி கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் நேற்று பஸ் நிலைய நுழைவு வாயிலில் மீண்டும் தமிழ் எழுத்துக்களை எழுத வலியுறுத்தி நகரசபை அலுவலகத்தில் தலைவர் வள்ளல் முனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகரசபை கமிஷனர் மோகன்குமார், கன்னட அமைப்பினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கன்னட அமைப்பினர் கூறியதாவது:-

ஒற்றுமையாக இருக்கிறோம்

பெங்களூருவில் இருந்து வந்த கன்னட அமைப்பை சேர்ந்தவர்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழில் எழுதியிருப்பதற்கு நாங்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. இங்கு தமிழர்களும், கன்னடர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த உறவு தொடரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம். எனவே, அழிக்கப்பட்ட தமிழ் பெயரை மீண்டும் எழுத நகரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, அதிகாரிகளை அழைத்து நகரசபை பஸ் நிலைய நுழைவு வாயிலில் அழிக்கப்பட்ட தமிழ் பெயரை மீண்டும் எழுதும்படி உத்தரவிட்டார். 

மீண்டும் தமிழில்...

இதை தொடர்ந்து கன்னட அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நகரசபை ஊழியர்கள் பஸ் நிலைய நுழைவு வாயிலில் மீண்டும் தமிழில் பஸ் நிலையத்தின் பெயரை எழுதினர். 
நகரசபை பஸ் நிலைய நுழைவு வாயிலில் அழிக்கப்பட்ட தமிழ் பெயரை எழுதி முடித்ததும், அங்கு கூடியிருந்த தமிழ் ஆர்வலர்கள், கன்னட அமைப்பினர், பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். 

மேலும் செய்திகள்