இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளி காதலியுடன் கைது
பெங்களூருவில் இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளி, தனது காதலியுடன் கைது செய்யப்பட்டார். நகைக்காக அவர்கள் 2 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளி, தனது காதலியுடன் கைது செய்யப்பட்டார். நகைக்காக அவர்கள் 2 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.
பெண் கொலை
பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சிதா(வயது 26). இவர், கடந்த 10-ந் தேதி இரவு தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கையிலேயே கத்தி இருந்தது. இதனால் அவரே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. ரஞ்சிதா அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளை போய் இருந்தது.
இதன் காரணமாக நகைக்காக, அவரை யாரோ கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டது போல சித்தரித்துவிட்டு சென்றிருக்கலாம் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில், ரஞ்சிதா கொலை செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் அவரது காதலனையும், இன்னொரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
2 பேர் கைது
விசாரணையில், அவர்கள் கே.பி.அக்ரஹாரா அருகே புவனேஷ்வரிநகரை சேர்ந்த ராஜசேகர், இந்திரம்மா என்று தெரிந்தது. இவர்களில் இந்திரம்மா, ரஞ்சிதா வசிக்கும் வீட்டில் மற்றொரு தளத்தில் வாடகைக்கு வசித்து வருகிறார். அவர் வீட்டு வேலையும், திருமண மண்டபங்களில் பாத்திரம் கழுவும் தொழிலாளியாகவும் வேலை செய்து வந்துள்ளார். ராஜசேகரும் கூலித் தொழிலாளி ஆவார். அவர் ரூ.2 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி இருந்தார்.
இந்திரம்மாவுக்கும் பணம் தேவைப்பட்டுள்ளது. மேலும் ராஜசேகரும், இந்திரம்மாவும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, ரஞ்சிதாவை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்க 2 பேரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த 10-ந் தேதி மாலையில் ரஞ்சிதாவின் வீட்டுக்கு இந்திரம்மா சென்றுள்ளார். அங்கு வைத்து 2 பேரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.
குத்திக் கொலை
அப்போது ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லை என்று, காதலன் ராஜசேகருக்கு இந்திரம்மா தகவல் தெரிவித்துள்ளார். உடனே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ராஜசேகர், ரஞ்சிதாவின் கழுத்தை வயரால் நெரித்துள்ளார். அதன்பிறகு, கத்தியால் அவரை குத்திக் கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் ரஞ்சிதாவின் கையில் அந்த கத்தியை ராஜசேகரும், இந்திரம்மாவும் வைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கைதான 2 பேரிடம் இருந்தும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 2 பேர் மீதும் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.