விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதம்

நிலத்தின் புல எண்ணை திருத்தம் செய்து ரக்கோரி கோட்டூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தனது குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தார்.

Update: 2021-07-12 18:01 GMT
கோட்டூர்;
நிலத்தின் புல எண்ணை திருத்தம் செய்து ரக்கோரி கோட்டூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தனது குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தார். 
விவசாய நிலம் 
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள கீழமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். விவசாயி. இவர் மேல பனையூர் கிராமத்தில் கடந்த 2010-ம் ஆண்டு் 49 சென்ட் விவசாய நிலம் வாங்கி தனது   
பெயரில் பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதலும் செய்யப்பட்டது.  இந்த நிலத்தின் சான்றிதழ் மூலம் கூட்டுறவு வங்கி கடன் பெற்று மானிய விலையில் விவசாய உபகரணங்கள், இடுபொருட்கள் உரங்கள் வாங்கி சாகுபடி செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு கிராம நிர்வாக அலுவலரிடம் நிலச்சான்று வாங்கிய போது நிலத்தின் புல எண். தவறாக இருந்தது. இது குறித்து மன்னார்குடி தாசில்தாருக்கு அனைத்து  உண்மை நகலையும் இணைத்து எனது நிலத்தின் புல எண் தவறாக உள்ளது என கூறி புல எண்ணை திருத்தம் செய்து தருமாறு மனு அளித்து கேட்டுக்கொண்டார். 
உண்ணாவிரதம்
இதைத்தொடர்ந்து மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று  தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த ஆண்டு கடந்த  ஜனவரி மாதம் 11-ந் தேதி மற்றும்29-ந் தேதிகளில் விசாரணைக்கு அழைப்பு ஆணை  வந்தது. 
இந்த 2 நாட்களிலும் மாதவன் நேரில் சென்றார். அப்போது அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. 
இது குறித்து தொடர்ந்து பலமுறை அதிகாரிகளி்டம் கேட்டும் யாரும் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால்  ஆத்திரமடைந்த மாதவன் நேற்று காலை 9 மணி அளவில் அவருடைய மனைவி சாந்தியுடன் கோட்டூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். 
பேச்சுவார்த்தை
 இது குறித்து தகவலறிந்த மன்னார்குடி தாசில்தார் தெய்வநாயகி கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செங்குட்டுவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தயில்  இன்னும் ஒரு வாரத்துக்குள் மாதவன் நிலத்தின் சரியான புல எண்ணை திருத்தம் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. கோட்டூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை விவசாயி ஒருவர் தனது குடு்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்