கத்தியால் குத்தி வாலிபர் கொலை

திருத்துறைப்பூண்டியில் தாய்-தந்தையை தாக்கிய வாலிபர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-07-12 17:53 GMT
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டியில் தாய்-தந்தையை தாக்கிய வாலிபர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். 
கொத்தனார்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் பாலு(வயது 60). கொத்தனாரான இவருக்கு 3 மனைவிகள். இதில் முதல் மனைவி வசந்தாவுக்கு சஞ்சய்காந்தி(35), புயல்ராஜன்(24), ஆகிய 2 மகன்களும், 2-வது மனைவி அஞ்சலிதேவிக்கு ராஜீவ்காந்தி, பிரபாகரன்(25) ஆகிய 2 மகன்களும், 3-வது மனைவி ரஷ்யாவுக்கு சிந்துஜா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர். 
இவர்கள் அனைவரும் தனித்தனி குடும்பமாக வசித்து வந்தனர். இவர்களில் வசந்தா இறந்துவிட்டார். வசந்தாவின் மகன் சஞ்சய்காந்திக்கு திருமணமாகவில்லை. டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் அடிக்கடி மதுபோதையில் உறவினர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள உறவுக்கார பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
தாக்குதல்
இதனால் பாலுவும், அஞ்சலிதேவியும் வெறுப்படைந்து   மயிலாடுதுறைக்கு சென்று வசித்து வந்தனர். நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டியில் உள்ள குடும்பத்தினரை பார்ப்பதற்காக பாலுவும், அஞ்சலிதேவியும் மயிலாடுதுறையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்தனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த சஞ்சய்காந்தி, எனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை என கேட்டு பாலுவையும், அஞ்சலிதேவியையும் தாக்கினார். இதில் பாலு மயங்கி கீழே விழுந்தார். அவரையும், அஞ்சலிதேவியையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
கொலை
இது குறித்து தகவல் அறிந்த சஞ்சய்காந்தியின் சகோதரர் புயல்ராஜன், மற்றொரு சகோதரர் பிரபாகரன் ஆகிய இருவரும் இரவு 9 மணி அளவில் சஞ்சய்காந்தி வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தியும், கட்டையால் தாக்கி விட்டும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் சஞ்சய்காந்தி படுகாயம் அடைந்தார். நேற்று அதிகாலை அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் சஞ்சய்காந்தி பிணமாக கிடந்தார். 
கைது
இது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுகன், வீரபரஞ்சோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சஞ்சய் காந்தி உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து புயல்ராஜன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மதுபோதையில் தாய்-தந்தையை தாக்கிய வாலிபரை சகோதரர்களே கொலை செய்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்