சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா தேரோட்டத்தை நடத்தக்கோரி பொதுமக்களுடன் எம்.எல்.ஏ. சாலை மறியல்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா தேரோட்டத்தை நடத்தக்கோரி பொதுமக்களுடன் எம்.எல்.ஏ. சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-12 17:49 GMT
சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனித்திருமஞ்சன விழா, ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் 14-ந்தேதியும், ஆனித்திருமஞ்சன விழா 15-ந்தேதியும் நடைபெற இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவிலில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழாவுக்கும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். ஆனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வழிபாடு நடத்தலாம், பக்தர்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்றும் கூறியிருந்தார். 
இருப்பினும் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழாவை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் ஆனித்திருமஞ்சன விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடராஜர் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் பொது தீட்சிதர்கள், பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் கடந்த ஆண்டைப்போல இந்தாண்டும், போலீஸ் பாதுகாப்புடன் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் தீட்சிதர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதை கேட்ட பாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டா் பாலசுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு, தேரோட்டம் மற்றும் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், அரசின் விதிமுறைப்படி தான் திருவிழாக்கள் நடைபெறும் என்று கூறினார். 

எம்.எல்.ஏ. சாலை மறியல்

இதையடுத்து பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர், ஆலய பாதுகாப்பு குழுவினர், இந்து முன்னணியினர்,  பா.ஜனதாவினர் மற்றும் பொதுமக்கள் கீழ சன்னதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேரோட்டத்தையும், ஆனித்திருமஞ்சன விழாவையும் நடத்த அனுமதிக்க வேண்டு்ம் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

உண்ணாவிரத போராட்டம்

இதுபற்றி அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், சிதம்பரம் தாசில்தார் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக போலீசார் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதையேற்ற எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் நாளை(அதாவது இன்று) காலைக்குள் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறிவிட்டு கலைந்து சென்றனர். 
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்