திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஸ் நிறுத்தங்களில் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
போக்குவரத்து நெரிசல்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அலுவலகத்துக்கும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதேபோன்று மளிகை, ஜவுளி, நகை, பாத்திர கடைகள், கோவிலுக்கு என திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருகின்றனர். இதனால் திருப்பத்தூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியூர்களில் இருந்து திருப்பத்தூருக்கும், திருப்பத்தூரில் இருந்து வெளியூருக்கும் தினமும் சுமார் 250 பஸ்கள் வந்து செல்கின்றன. திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்கள் கிருஷ்ணகிரி மெயின் ரோடு மற்றும் வாணியம்பாடி மெயின்ரோடு பகுதிகளில் ஆங்காங்கே பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இந்த பஸ் பஸ் நிறுத்தங்களில் நிறுத்தப்படும் போது வழிநெடுகிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி புதுப்பேட்டை பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின் ரோடு, மீனாட்சி தியேட்டர், ஸ்டேட் வங்கி, நியூ சினிமா தியேட்டர், தூயநெஞ்சக் கல்லூரி பகுதிகலில் உள்ள பஸ் நிறுத்தங்களில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றிசெல்வதால் போக்குவரத்து மிகவும் பாதிப்படைகிறது. ஆகையால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கினால் நெரிசல் குறையும் என்பது குறித்து ஆய்வு செய்து, அந்தப் பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி அதற்குள் பஸ்கள் சென்று பயணிகளை ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளததாக தெரிவித்தார்.
ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் பெருமாள்முருகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் உடன் இருந்தனர்.