தென்மேற்கு பருவமழையையொட்டி கால்வாய் தூர்வாரும் பணி மும்முரம்
தென்மேற்கு பருவமழையையொட்டி வெள்ள சேதங்களை தடுக்க கால்வாய் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி,
தென்மேற்கு பருவமழையையொட்டி வெள்ள சேதங்களை தடுக்க கால்வாய் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சப்-கலெக்டர் ஆய்வு
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் வழியாக ஜமீன்ஊத்துக்குளியில் உள்ள கிருஷ்ணா குளத்திற்கு செல்கிறது.
இந்த கால்வாயில் பருவமழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், கால்வாயையொட்டி உள்ள வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்து விடுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் வெள்ள சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடராஜ் மணியகாரர் காலனி பகுதியில் நேற்று தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் மழை காலத்தில் கழிவுநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் கால்வாயை முழுமையாக தூர்வார வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது நகராட்சி என்ஜினீயர் மேனகா மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஒரு வாரத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்
பொள்ளாச்சி நகரில் சேகரமாகும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் மூலம் கிருஷ்ணா குளத்திற்கு செல்கிறது. மரப்பேட்டை முதல் கண்ணப்ப நகர் வரை கால்வாய் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதால் வெள்ளப்பெருக்க தடுக்க கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது.
இந்த பணிக்கு நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க கூடுதலாக ஒரு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட உள்ளது. ஒரு வார காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.