கோவில்பட்டியில் இரும்பு கம்பியால் பெண் அடித்துக் கொலை
கோவில்பட்டியில் இரும்பு கம்பியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாரங்குளம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரெஜினா மேரி (50).
இவர்களுடைய மகள் புனிதா என்ற கனகலட்சுமி (21). இவருக்கு திருமணமாகி விருதுநகரில் கணவர் சக்திவேலுடன் வசித்து வருகிறார்.
பிணமாக கிடந்த பெண்
நேற்று முன்தினம் மாலையில் புனிதா தன்னுடைய பெற்றோரிடம் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர்கள் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் நேற்று காலையில் புனிதா பெற்றோரை பார்ப்பதற்காக கட்டாரங்குளத்துக்கு வந்தார்.
அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் தாயார் ரெஜினா மேரி அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மற்றொரு அறையில் தந்தை கார்மேகம் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
கணவருக்கு தீவிர சிகிச்சை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புனிதா கூச்சலிட்டார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
படுகாயம் அடைந்த கார்மேகத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த ரெஜினா மேரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
அதன் விவரம் வருமாறு:-
நிலப்பிரச்சினை
கார்மேகத்தின் பக்கத்து வீட்டில் கருப்பசாமி (74) என்பவர் வசித்து வந்தார். அங்குள்ள நிலத்தை விற்பது தொடர்பாக கார்மேகத்துக்கும், கருப்பசாமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. பின்னர் கருப்பசாமி, கோவில்பட்டி பங்களா தெருவில் குடியேறினார். அங்கு இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் கருப்பசாமி, கார்மேகத்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் தனித்தனி அறைகளில் தூங்கி கொண்டிருந்த கார்மேகம், ரெஜினாமேரி ஆகிய 2 பேரையும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ரெஜினாமேரி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
கைது
இதையடுத்து கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.