செந்நாய்கள் கடித்து 11 ஆடுகள் பலி

வருசநாடு அருகே செந்நாய்கள் கடித்து 11 ஆடுகள் பலியாகின.

Update: 2021-07-12 17:09 GMT
தேனி : 

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 40). இவர் வீட்டில் சொந்தமாக 23 ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று காலை சிதம்பரம் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக தர்மராஜபுரம் அருகே உள்ள சூரங்குட்டம் மலைப்பகுதிக்கு அழைத்து சென்றார். 

பின்பு காலை 9 மணி அளவில் மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு சாப்பிடுவதற்காக சிதம்பரம் வீட்டுக்கு சென்றார். 

பின்னர் காலை 11 மணியளவில் ஆடுகளை அழைத்து வருவதற்காக மீண்டும் தோட்டத்திற்கு சென்றார். அங்கு 11 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மீதமிருந்த ஆடுகளை காணவில்லை. 
இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் மற்றும் கண்டமனூர் வனத்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்பு இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களில் காணப்பட்ட நக கீறல்கள் மற்றும் தோட்டத்தில் கிடைத்த காலடி தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். 

அப்போது மலைப்பகுதியில் இருந்து செந்நாய்கள் கூட்டமாக வந்து ஆடுகளை கடித்து இருக்கலாம் என்றும், மற்ற ஆடுகளை செந்நாய்கள் கூட்டம் மலைப் பகுதிக்குள் விரட்டி சென்றிருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். 

இதையடுத்து சூரங்குட்டம் மலைப்பகுதியில் வேறு ஏதேனும் ஆடுகளின் உடல்கள் உள்ளதா? என்பது தொடர்பாக வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்