தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு செலுத்தும் பணி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிஷூல்டு தடுப்பூசி கூடுதலாக நீலகிரிக்கு வந்தது.
பின்னர் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 4 வட்டாரங்கள், பேரூராட்சிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள் முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்த வரிசையில் காத்திருந்தனர்.
ஊட்டி நகராட்சியில் காந்தல் ஓம் பிரகாஷ் துவக்க பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. டோக்கன் பெற்றவர்கள் மட்டுமின்றி டோக்கன் பெறாதவர்களும் வந்திருந்தனர். அங்கு வரிசையில் காத்திருந்த நபர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் விவரங்கள் இணையதளத்தில் பதியப்பட்டு, 600 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.