தமிழக எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் ஜிகா வைரஸ், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழக எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி
கேரளாவில் ஜிகா வைரஸ், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழக எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜிகா வைரஸ் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் முதல் பாதிப்புகள் குறைந்து வருவதால் ஊரடங்கில் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தொடங்கப்பட்ட உள்ளது.
மேலும் அனைத்து வகையான கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. ஒரு சிலவற்றிற்கு மட்டும் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதற்கிடையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் உள்ள கோபாலபுரம், நடுப்புணி, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், வீரப்பகவுண்டனூர் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சுகாதாரத்துறை கண்காணிப்பு
கேரளாவில் இருந்து இ-பதிவு பெற்று வரும் வாகனங்கள் மட்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. இதற்காக போலீசார் சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.
கேரளாவில் இருந்து வரும் நபர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படுகிறது. அப்போது யாருக்காவது காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஊராட்சி மூலம் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
சோதனைச்சாவடிகளில் ஒரு டாக்டர் தலைமையில் சுழற்சி முறையில் 3 குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.