விபத்தில் சிக்கிய மூதாட்டியை ஆஸ்பத்திரியில் சேர்த்த இன்ஸ்பெக்டர்-தனது ஜீப்பில் அழைத்து சென்றார்
விபத்தில் சிக்கிய மூதாட்டியை தனது ஜீப்பில் அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் இன்ஸ்பெக்டர் சேர்த்தார்.
கல்லாவி:
ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 88). இவர் தமிழக அரசின் மாதாந்திர முதியோர் உதவித்தொகையை பெற தனது உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் ஊத்தங்கரை வந்தார். பின்னர் அங்குள்ள வங்கி ஒன்றில் பணத்தை எடுத்து விட்டு கல்லாவிக்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில், கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய தெடுஞ்சாலையில் சென்றபோது சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதனால் மூதாட்டி சரஸ்வதி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற ஊத்தங்கரை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தனது ஜீப்பை நிறுத்தினார். பின்னர் மூதாட்டியை தூக்கி சென்று, தனது ஜீப் மூலம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.