செல்போனில் பேசக்கூடாது என்றதால் காதலன் தற்கொலை: கல்லூரி மாணவி ‘சானிடைசர்’ குடித்ததால் பரபரப்பு
ஓசூரில் செல்போனில் பேசக்கூடாது என்றதால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அவருடைய காதலியான மாணவியும் ‘சானிடைசர்’ குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்:
கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜெய்சக்தி நகரை சேர்ந்தவர்கள் நாகராஜ், மங்கலம். இந்த தம்பதியின் மகன் பரத் (வயது 18). ஓசூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு டிப்ளமோ படித்து வந்தார். இவருக்கும், ஓசூரை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவருக்கும் பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
தற்போது அந்த மாணவி, கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், பரத், கல்லூரி மாணவி ஆகியோர் வீட்டில் இருந்தபடி, ஆன்லைனில் பாடங்களை படித்து வந்தனர்.
தற்கொலை
அப்போது, அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்ததுடன், பரத்துடன் பேசக்கூடாது என்று தெரிவித்தனர். இதனை அறிந்த பரத், மனமுடைந்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைக்கு அந்த மாணவியின் பெற்றோர் தான் காரணம் என எண்ணி ஆத்திரமடைந்த பரத்தின் உறவினர்கள், மாணவியின் வீட்டுக்கு சென்று கதவு, ஜன்னல்களை அடித்து உடைத்தனர்.
‘சானிடைசரை’ குடித்தார்
இதனிடையே காதலன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அந்த மாணவி, வீட்டில் இருந்த சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனில் பேசக்கூடாது என்றதால் காதலன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த கல்லூரி மாணவியும், சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.