மத்தூர் அருகே பானிபூரி வியாபாரி வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மத்தூர் அருகே பானிபூரி வியாபாரி வீட்டில் 30 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-12 17:07 GMT
மத்தூர்:
பானிபூரி வியாபாரி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கரடிகொல்லப்பட்டி சவுளூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 52). இவர், தனது குடும்பத்துடன் சென்னை ஆவடியில் தங்கி, அங்கு பானிபூரி கடை நடத்தி வருகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் மூடப்பட்டன. 
இதனால் தொழில் இல்லாததால் அவர் தனது குடும்பத்துடன் சவுளூருக்கு வந்து, 2 மாதங்கள் தங்கி இருந்தார். இதையடுத்து கடந்த மாதம் 29-ந் தேதி மீண்டும் குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
30 பவுன் நகைகள் திருட்டு
இந்தநிலையில் தனது மூத்த மகள் மஞ்சுவை மருத்துவம் சார்ந்த படிப்பில் சேர்ப்பதற்காக சவுளூரில் உள்ள வீட்டில் வைத்திருந்த நகைகள், பணத்தை எடுப்பதற்காக சாம்ராஜ் நேற்று முன்தினம் காலை வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் 30 பவுன் நகைகள், ரூ.75 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. 
இதுகுறித்து அவர் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. 
வலைவீச்சு
போலீசாரின் விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகள், பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மத்தூர் அருகே பானிபூரி வியாபாரி வீட்டில் 30 பவுன் நகைகள், ரூ.75 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்