கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக குவிந்த மக்கள்
வாராந்திர குறைகேட்பு கூட்ட நாளையொட்டி மனு கொடுப்பதற்காக நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.;
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அப்போது மாவட்ட கலெக்டர் தலைமையில், பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுவார்கள். பின்னர் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை, அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
புகார் பெட்டி
இதனால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்கு வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டுச் சென்றனர்.
அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் தொடக்கத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், கொரோனா 2-வது அலை தாக்கத்தால் குறைகேட்பு கூட்டம் தொடர்ந்து நடைபெறவில்லை.
கோரிக்கை மனு
இந்த நிலையில் நேற்று குறைகேட்பு கூட்டம் நடத்தாவிட்டாலும், ஊரடங்கில் அதிகளவு தளர்வு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து, கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில், தங்களது கோரிக்கை மனுக்களை போட்டுச் சென்றனர்.
அந்த வகையில் பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் பகுதி மக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தாங்கள் தட்டாம்பாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த பலர், சொந்த வீடு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு அரசு தொகுப்பு வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதேபோல் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அடுத்தடுத்து வந்து மனு கொடுத்ததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.