சின்னசேலம் அருகே எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கார் மோதி பலி
சின்னசேலம் அருகே எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கார் மோதி பலி;
சின்னசேலம்
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் வெங்கடேஷ்(வயது 32). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் சேர்ந்து சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள மும்முடியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகின்றனர். வெங்கடேஷ் தினமும் மகேந்திரனுடன் காரில் கடைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.
ஆனால் சம்பவத்தன்று மகேந்திரன் வெளியூர் சென்றிருந்ததால் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மும்முடிக்கு சென்று விட்டு வியாபாரம் முடிந்ததும் இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சின்னசேலம் ஏரி அருகே வந்த போது எதிரே சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.