கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்
வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.
ஊட்டி,
வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தொற்று பரவல்
கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது. சமீபத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டு, இ-பதிவு நடைமுறையில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
ஊரடங்கில் தளர்வு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு அதிகம் பேர் வருகின்றனர். இதையொட்டி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
‘நெகட்டிவ்’ சான்றிதழ்
நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர் மக்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பினாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம். கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது.
இந்த மாநிலத்தை ஒட்டி உள்ள நீலகிரியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி, குன்னூர் வட்டாரங்களில் ஏ.டி.எஸ். கொசுக்கள் இல்லை. கூடலூர் வட்டாரத்தில் அந்த வகை கொசுக்கள் கண்டறியப்பட்டு, ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பதிவாகி உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொசுக்கள் இனப்பெருக்கத்தை தடுக்க முடியும்.
கொசு மருந்து
கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகளில் மாலை 6 மணிக்கு மேல் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. கூடலூர் வட்டாரத்தில் கவனம் செலுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கில் தளர்வால் தங்கும் விடுதிகளில் பலர் தங்கி வருகின்றனர்.
அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முககவசம் அணிவது போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். யாருக்கேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.