பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் ஊர்வலம்
சீர்காழி, மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி்யினர் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
சீர்காழி:
சீர்காழி, மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி்யினர் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
சைக்கிள் ஊர்வலம்
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பாலகுரு, ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர தலைவர் லட்சுமணன் வரவேற்றார்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து பழைய பஸ் நிலையத்திலிருந்து மணிக்கூண்டு வரை சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். ஊர்வலத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானு சேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், பட்டேல், மாவட்ட நிர்வாகிகள் சுப்பராயன், தியாக கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
மயிலாடுதுறை
இதேபோல் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார். மயிலாடுதுறை கூறைநாடு காமராஜர் மாளிகை முன்பு சைக்கிள் ஊர்வலம் தொடங்கி, பஸ் நிலையம் வரை செல்வதாக இருந்தது. ஆனால் ஊர்வலம் தொடங்கிய சிறிது தூரத்திலேயே காந்தி சிலை முன்பு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.