மடத்துக்குளம் அருகே திருமணமாகி 1½ வருடத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

மடத்துக்குளம் அருகே திருமணமாகி 1½ வருடத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Update: 2021-07-12 16:02 GMT
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே திருமணமாகி 1½ வருடத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வீடு கிரகப்பிரவேசம்
மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி மலையாண்டிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி மஞ்சுளாதேவி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது. 
இவர்கள் புதிதாக வீடு கட்டினர். இந்த வீட்டின் கிரகப்பிரவேசத்தை வருகிற 16-ந்தேதி நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் உறவுகளுக்கு அழைப்பு செய்யும் விஷயத்தில் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் உறவினர்களுக்கு அழைப்பு சொல்வதற்காக அன்பழகன் தனது தாயாரை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு சென்று விட்டார். பாட்டி வேலம்மாள் என்பவருடன் வீட்டில் இருந்த மஞ்சுளா தேவி உள்அறையில் கைக்குழந்தையுடன் படுத்து தூங்கினார். 
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தை தொடர்ச்சியாக அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த  பாட்டி வேலம்மாள் மஞ்சுளாதேவியின் அறைக்கதவை தட்டினார். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதன் காரணமாக  அச்சமடைந்த வேலம்மாள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
அவர்கள் விரைந்து வந்து மஞ்சுளாதேவி தங்கியிருந்த அறை ஜன்னலை உடைத்து உள்ளே பார்த்த போது அங்கு மஞ்சுளாதேவி  மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து மஞ்சுளாதேவியின் தந்தை கிருஷ்ணனுக்குத் தகவல் தெரிவித்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மஞ்சுளாதேவி இறந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கணியூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். 
மேலும் கணியூர் போலீசார் மஞ்சுளாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் மஞ்சுளாதேவி தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 5 மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு விட்டு இளம்பெண் தூக்குப்போட்டுதற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்