பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் ஊர்வலம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-07-12 15:51 GMT
தர்மபுரி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
சைக்கிள் ஊர்வலம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சைக்கிள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
தர்மபுரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி காமராஜர் சிலை அருகில் இருந்து சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வகத்திற்கு நகர தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து கழக ஐ.என்.டி.யு.சி. தலைவர் தங்கவேல், நிர்வாகிகள் வேடி, சேகர், தகடூர் வேணுகோபால், சென்னகேசவன், மணி, ரமேஷ், ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம்-அரூர்
இதேபோன்று காரிமங்கலம் ஒன்றியம் பேகாரஅள்ளி கிராமத்தில் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ரத்தினம், சிவன், கனகராஜ், வடமலை, மாதேஷ், சங்கர், பெரியசாமி, துரை உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் அரூர் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவண்ணாமலை ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் இருந்து சைக்கிள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு வட்டார தலைவர் சுபாஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகி வஜ்ஜிரம், மாவட்ட பிற்பட்டோர் பிரிவு தலைவர் நவீன், எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் பைரவன், கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், வேடியப்ப கவுண்டர், செல்வம், சிவலிங்கம், மோகன், புஷ்ப லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
நல்லம்பள்ளி
இதேபோன்று நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அதியமான்கோட்டையில் சைக்கிள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் குமரவேல் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். இதில் வட்டார பொருளாளர் அன்னை முருகன், மேற்கு ஒன்றிய வட்டார தலைவர் மாதப்பன் மற்றும் கட்சி நிா்வாகிகள் தொண்டர்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்