காங்கேயத்தில் பூட்டிக்கிடந்த அலுவலகம் முன்பு மனு வழங்க பொதுமக்கள் காத்திருந்தனர்.

காங்கேயத்தில் பூட்டிக்கிடந்த ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு மனு வழங்க பொதுமக்கள் காத்திருந்தனர்.

Update: 2021-07-12 15:44 GMT
காங்கேயம்
காங்கேயத்தில் பூட்டிக்கிடந்த ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு மனு வழங்க பொதுமக்கள் காத்திருந்தனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
காங்கேயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் ஆகிய தாலுகாக்களுக்கான இந்த அலுவலகத்தில் உள்ள தனி தாசில்தார் அறை, ஊழியர்கள் பணிபுரியும் அறை ஆகியவற்றில் கடந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இந்த அறைகள் மூடி சீலிடப்பட்டு தற்போது போலீஸ் பாதுகாப்புடன் உள்ளது.
எனவே இங்கு செயல்பட்டு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், பின்புறம் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு பெயர்ப்பலகையும் இல்லாததால், முன்புறம் உள்ள அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அலுவலகம் பூட்டியிருப்பதால், சில மாதங்களாக கோரிக்கை மனுக்களைக்கொடுக்க முடியாமல் திரும்பிச்சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு உடுமலை பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்ப மனுக்களோடு வந்திருந்தனர்.
பூட்டிய அலுவலகம் முன்பு காத்துக்கிடந்தனர்
ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். இதன் பின்னர் இந்த அலுவலகம் பின்புற கட்டிடத்தில் செயல்படுவதை தெரிந்துகொண்டு அங்கு சென்ற பொதுமக்கள், அங்கும் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் வெகுநேரம் பூட்டிய அலுவலகத்துக்கு முன்பு செய்வதறியாது காத்திருந்தனர்.
எனவே காங்கேயத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முறையாக செயல்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்