போலி கால்நடை டாக்டர்களுக்கு சிறை: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
போலி கால்நடை டாக்டர்கள் பிடிபட்டால் அபராதத்துடன் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலி கால்நடை டாக்டர்கள்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதும் அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல். போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு இழப்பீடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. மாவட்டங்களில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை டாக்டர் என்று கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறு.
சிறைத்தண்டனை
செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால் அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவர்கள். எனவே கால்நடைகளுக்கான சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்களை மட்டுமே பொதுமக்கள் அணுக வேண்டும்.
போலி டாக்டர்கள் குறித்த தகவலை அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநருக்கும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலும் தெரிவிக்கலாம்.போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டால் ரூ. 1000 அபராதம் அல்லது 6 மாத கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.