பட்டினப்பாக்கத்தில் மீண்டும் அரங்கேறிய நடைபாதை ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் கண்துடைப்பு நாடகம் அம்பலமானது

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து மீண்டும் ஓட்டல்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இதனால் அதிகாரிகள் நடத்திய கண்துடைப்பு நாடகம் அம்பலமாகியுள்ளது.

Update: 2021-07-12 02:06 GMT
சென்னை, 

சென்னை பட்டினப்பாக்கத்தில் நொச்சிக்குப்பத்தை ஒட்டியுள்ள லூப் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கடந்த 9-ந் தேதி ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் குழு சென்றது. அங்கு நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டன. நடைபாதையை மீண்டும் ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் குழு அப்பகுதியினருக்கு எச்சரிக்கையும் விடுத்து சென்றனர்.

ஆனால் ‘பழைய குருடி கதவை திறடி’ என்பதுபோல, அதிகாரிகள் குழு சென்ற அடுத்த நாளே மீண்டும் நடைபாதையில் அதே இடத்தில் ஓட்டல்களும், பெட்டிக்கடைகளும் முன்பு போல செயல்பட தொடங்கிவிட்டன. விடுமுறை நாளான நேற்று மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் மிகுதியாகவே இருந்தது. இதனால் நடைபாதை ஓட்டல்களிலும் கூட்டம் காணப்பட்டன. முன்பைவிட சுறுசுறுப்பாக வியாபாரமும் களைகட்டியது.

பட்டினப்பாக்கத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதுமே ‘நாங்கள் நடவடிக்கை எடுத்துவிட்டோம்’ என அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு மகிழ்ந்தனர். ஆனால் ‘அதிகாரிகள் நடத்தியது வெறும் கண்துடைப்பு நாடகம். அது இப்போது அம்பலமாகியிருக்கிறது’ என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:-

பட்டினப்பாக்கத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடைபாதையை மீட்டவுடன் உண்மையிலேயே சந்தோஷம் அடைந்தோம். ஆனால் எதற்கும் பயப்படாமல் மீண்டும் வியாபாரிகள் அதே இடத்தில் கடைகளை அமைத்ததில் இருந்தே அதிகாரிகளின் திறமை தெரிந்துவிட்டது.

இதற்கு நடவடிக்கை என்ற பெயரில் நாடகம் ஆடாமலேயே இருந்திருக்கலாம். இனி இந்த போக்கு தொடரும். பொதுமக்கள் இனி இதை கண்டும் காணாததுபோல செல்லவேண்டியது தான். இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்