கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள், தனிநபர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல்

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள், தனிநபர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல் போலீசாருடன் இணைந்து மாநகராட்சி நடவடிக்கை.

Update: 2021-07-12 01:58 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க மாநகராட்சி, போலீசாருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 9 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் மேற்கொண்ட கள ஆய்வில் புரசைவாக்கம், தியாகராய நகர், ராயபுரம் மற்றும் பாடி ஆகிய பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 64 கடைகளில் நேற்று இரவு 7 மணி அளவில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சென்னை முழுவதும் நேற்று ஒரு நாள் மட்டும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 800 அபராதமும், நேற்று ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 300 அபராதமும் என 2 நாட்களில் மொத்தம் ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் அரசின் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுகொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்