அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.

Update: 2021-07-11 21:22 GMT
ஈரோடு
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார். 
எக்கு கோட்டை
கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்றால் ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை என்று அனைவராலும் வர்ணிக்கும் அளவுக்கு அ.தி.மு.க.வுக்கு வெற்றிகளை அள்ளித்தரும் பகுதியாக இருந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ஈரோடு மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவே எம்.எல்.ஏ.க்களை அளித்து உள்ளன. அவருக்கு பின்னர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மீது மிகுந்த பற்று கொண்டவர்களாக ஈரோடு வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். 1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று பிரிந்து போட்டியிட்டது. தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரோடு மாவட்டத்தில்தான் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1996-ம் ஆண்டு மற்றும் 2006-ம் ஆண்டு தேர்தல்களில்தான் ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. சற்று ஆதிக்கம் காட்டியது. 2011, 2016 ஆகிய 2 சட்டமன்ற தேர்தல்களிலும் ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதிலும் 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிட்டு 8 தொகுதிகளும் வென்று சாதனை படைத்தது. கொங்கு மண்டலத்தில் அத்தனை தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி என்ற சாதனையை படைத்தது.
அமைச்சர் பதவி
இந்த தேர்தல் பிரசாரத்தின்போதுதான், அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை தொகுதியில் வைத்து வெளியிட்டார். அப்போது அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், அ.தி.மு.க.வின் புறநகர் மாவட்ட செயலாளராகவும் பதவியில் இருந்தவர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.
அ.தி.மு.க.வின் கிளை உறுப்பினராக கட்சியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., அமைச்சர் என்று உயர்ந்தவர். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழக வருவாய்த்துறை அமைச்சராவும் தொடர்ந்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
2016-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தலை சந்தித்தபோது ஈரோடு மாவட்டத்தின் ஒரே அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்தவர். ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளராக பதவியில் இருந்தாலும் மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றினார். இந்த தேர்தலில் 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து அமைந்த அமைச்சரவையில் தோப்பு வெங்கடாசலத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அத்துடன் மாவட்ட செயலாளர் பொறுப்பும் அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனிடம் வழங்கப்பட்டது. ஆனால் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்.
அரசு மருத்துவக்கல்லூரி
இந்தநிலையில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவால் அமைச்சரவை மாற்றம் நடந்தது. அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய இடத்துக்கு வந்தார். இந்த மாற்றங்கள் தனக்கும் நிகழும் என்று தோப்பு வெங்கடாசலம் நம்பி இருந்தார். ஆனால் ஏமாற்றம் மிஞ்சியது.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையிலும், மீண்டும் கட்சியில் மாவட்ட செயலாளர் என்ற பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவியை அவருக்கு கொடுத்தனர். அவர் கொடுக்கும் விளம்பரங்களில் கூட அந்த பதவியை போட்டுக்கொள்ள விரும்பியதில்லை. ஆனாலும், தலைமைக்கு மிகுந்த விசுவாசத்துடன் இருந்தார். 
தேர்தல் நேரத்தில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி கட்டணம் தொடர்பாக மருத்துவ மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தியபோது அவர்களை முதல்-அமைச்சரை சந்திக்க வைத்து போராட்டத்தை சுமுகமாக முடித்தார். மேலும், பெருந்துறையில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த சாலை போக்குவரத்து மருத்துவக்கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற முக்கிய பங்கு வகித்தவர் தோப்பு வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது. பெருந்துறை பகுதியில் பாதாள சாக்கடை, மின் புதைவட கேபிள் போன்ற பல திட்டங்களை கொண்டு வர முயற்சி எடுத்துள்ளார்.
மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம்
கட்சிக்குள் அவருக்கு எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் முக்கியத்துவம் அளித்து வந்தார். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பொதுமக்கள் என்றும் மறக்க முடியாத அமைச்சர்கள் யார் என்று கேட்டால் சு.முத்துசாமி, கே.ஏ.செங்கோட்டையன் என்று பதில்கள் வரும். இந்த வரிசையில் இடம் பிடித்த இன்னொருவர் என்றால் அது தோப்பு வெங்கடாசலம் தான். இத்தனைக்கும் அவர் அமைச்சராக பதவி வகித்தது 4 ஆண்டுகளுக்கும் குறைவாகத்தான். 10 ஆண்டுகள் தொடர்ந்து பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பெருந்துறை தொகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை கொண்டு வந்தார். கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் பெருந்துறை தொகுதியின் வறட்சி பகுதிகள் சேர்ப்பு, மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் கிராமப்பகுதி வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கியது என்று பல திட்டங்களை நிறைவேற்றியவர். எம்.எல்.ஏ. என்ற முறையில் தொகுதியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டங்களை அவ்வப்போது நடத்தி பணிகள் குறித்து கேட்டு அறிந்தவர்.
பெருந்துறையை பொறுத்தவரை கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் சேலம்-கொச்சி 4 வழிச்சாலையில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கு நுழைவுவாயிலாக உள்ள நகரமாகும். ஒரு பேரூராட்சியாக இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒரு நகரத்துக்கு உரிய அழகிய தோற்றத்தை பெருந்துறை அடைந்து இருப்பதற்கு தோப்பு வெங்கடாசலம் காரணம் என்பது பெருந்துறை மக்களுக்கு நன்றாக தெரியும்.
பெரும் அதிர்ச்சி
இப்படி அ.தி.மு.க.வுக்கும் தொகுதி மக்களுக்கும் உண்மையாக இருந்தாலும், ஈரோடு மாவட்ட அளவில் அவருக்கான பனிப்போர் நிர்வாகிகளிடம் இருந்து கொண்டே இருந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சருக்கும், தோப்பு வெங்கடாசலத்துக்கும் நடந்த பனிப்போரால் தொடர்ந்து கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகள், அரசு திட்ட விழாக்களில் இருந்து தோப்பு வெங்கடாசலம் புறக்கணிக்கப்பட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் அப்போதே குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு புறநகர் மாவட்டத்தில் பெருந்துறை தொகுதியில்தான் அ.தி.மு.க. வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்து இருந்ததையும் தோப்பு வெங்கடாசலம் சுட்டிக்காட்டினார்.
தேர்தலுக்கு முன்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடும் தமிழகம் பிரசார பயணம் மேற்கொண்டபோது ஈரோடு மாவட்டத்திலேயே பிரமாண்ட கூட்டம் ஏற்பாடு செய்து அவரை மக்கள் மத்தியில் பேச வைத்தவர் தோப்பு வெங்கடாசலம். இதன் மூலம் கட்சி தலைமை மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்தார். ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. தேர்தல் களம்தான் ஒரு அரசியல்வாதிக்கு மிகவும் முக்கியமான தருணம். கட்சி சீட் தராவிட்டாலும் நேர்மையாக மக்களை சந்திப்பேன் என்று சுயேச்சையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டார்.. கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக அவரை அ.தி.மு.க.வில் இருந்து கட்சி தலைமை நீக்கியது. தோப்பு சின்னத்தில் போட்டியிட்ட அவருக்கு சுமார் 10 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.
தி.மு.க.வில் இணைந்தார்
இந்த தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தோப்பு வெங்கடாசலம் தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் சுமார் 10 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினார். தேர்தல் பிரச்சினைகளுக்கு பிறகும் அ.தி.மு.க. தலைமை தன்னிடம் பேசி, நிலைமையை புரிந்து அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் வேறு எங்கும் செல்லாமல் இருந்தார் தோப்பு வெங்கடாசலம்.
இந்தநிலையில் நேற்று சென்னையில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் இணைந்தார்.
இது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே இவர் தி.மு.க.வில் இணையலாம் என்ற தகவல் வந்தபோது, எப்போதும் அ.தி.மு.க. தொண்டனாகவே இருப்பேன் என்று உறுதியுடன் பதில் அளித்தார். ஆனால் அ.தி.மு.க. தலைமை தொடர்ந்து அவரை ஓரம்கட்டியதால் தி.மு.க.வுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அவர் மட்டும் இல்லாமல் ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.வின் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தோப்பு வெங்கடாசலத்துடன் தி.மு.க.வில் இணைந்து உள்ளனர். அவர் தி.மு.க.வில் இணைந்ததை முன்னிட்டு அவரது பிரசார வாகனம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் அலங்கரிக்கப்பட்டது.
அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக ஈரோடு மாவட்டத்தில் வலம் வந்த தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு உள்ளார்.
கடின உழைப்பு
ஏற்கனவே ஈரோடு புறநகர் மாவட்டத்தில் செல்வாக்குடன் திகழும் முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் தி.மு.க.வுக்கு சென்ற நிலையில், மிகுந்த செல்வாக்கு மிக்க எம்.எல்.ஏ.வாக வலம் வந்த தோப்பு வெங்கடாசலமும் தி.மு.க.வுக்கு சென்று உள்ளார்.
பெருந்துறை தொகுதி ஈரோடு மாவட்ட தி.மு.க.வின் தெற்கு மாவட்ட பகுதியாக இருக்கிறது. மாவட்ட செயலாளராக உள்ள அமைச்சர் சு.முத்துசாமி அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கு உள்ளவர் என்பதாலும், அவர் அ.தி.மு.க.வில் இருந்தபோதே, தோப்பு என்.டி.வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் அவரது அபிமானிகள் என்பதாலும் ஒருங்கிணைந்து செயல்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தோப்பு வெங்கடாசலம் காலம் கடந்து இந்த முடிவை எடுத்தாலும் நல்ல முடிவாக எடுத்து உள்ளார். தேர்தலுக்கு முன்பாகவே அவர் தி.மு.க.வில் இணையும் வாய்ப்பு இருந்தது. அப்போது இணைந்து இருந்தால் இன்று மீண்டும் பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஆகி இருந்திருப்பார். ஆனால் அ.தி.மு.க. தலைமையை நம்பி ஏமாந்து விட்டார் என்று அவரது ஆதரவாளர் ஒருவர் கூறினார்.
பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தோப்பு வெங்கடாசலம் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். அவரை ஓரம் கட்டி அரசியல் வாழ்வில் இருந்து ஒதுக்கவே இன்னொருவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இனிமேல் அவரது கடின உழைப்பால் பெருந்துறை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும் நிலை உருவாகி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பெருந்துறை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதே இல்லை என்ற வரலாறு இருக்கும் நிலையில், அ.தி.மு.க.வில் செல்வாக்குடன் வலம் வந்த முன்னாள் அமைச்சர் இணைந்து இருப்பது தி.மு.க. தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வாழ்த்து
இதேபோல், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நாமக்கல் பி.ஆர்.சுந்தரமும் தன்னை தி.மு.க.வில் நேற்று இணைத்துக்கொண்டார்.
தி.மு.க.வில் சேர்ந்தவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், ஆர்.எஸ்.பாரதி, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.ராஜேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்