மழைக்கால கூட்டத்தொடரில் 20 மசோதாக்கள் தாக்கல் செய்ய முடிவு; பிரகலாத் ஜோஷி பேட்டி

மழைக்கால கூட்டத்தொடரில் 20 மசோதாக்கள் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.

Update: 2021-07-11 21:01 GMT
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி.
பெங்களூரு: தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 20 மசோதாக்களை தாக்கல் செய்து, நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை எந்த விதமான கூச்சல், குழப்பமும் இன்றி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருகிற 18-ந் தேதி அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். 

மழைக்கால கூட்டத்தொடரின் போது நாட்டின் வளர்ச்சி மற்றும் தற்போது இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
கொரோனா 2-வது அலையை மத்திய அரசு திறம்பட கையாண்டது. உலகத்திலேயே இந்தியாவில் தான் கொரோனா தடுப்பூசி போடும் பணி அதிவேகமாக நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. 

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போடுகிறார்கள். நாடு முழுவதும் 37 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த பணியை இன்னும் தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்