35 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது

திருப்பூரில் 35 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். அவரை விடுவிக்கக் கோரி வனத்துறை அலுவலகத்தில் உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.;

Update: 2021-07-11 20:48 GMT
நல்லூர்
திருப்பூரில் 35 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். அவரை விடுவிக்கக் கோரி வனத்துறை அலுவலகத்தில் உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
செத்துக்கிடந்த மயில்கள்
திருப்பூர் அருகே உள்ள பொல்லி காளிபாளையம் ஒத்தக்கடையில் காட்டுப்பகுதி உள்ளது. அங்குள்ள ஒரு தோட்டத்து பகுதியில் 10 ஆண் மயில்கள், 25 பெண் மயில்கள் என மொத்தம் 35 மயில்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செத்துக்கிடந்தன. இது பற்றிய தகவல் அறிந்ததும்  ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர், கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை செய்தனர். பின்னர் அங்கு செத்துக்கிடந்த மயில்களின் உடல் பாகங்கள் மருத்துவ பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதையடுத்து மயில்கள் எப்படி செத்தது? என்று கண்டுபிடிக்க  அமராவதி வனச்சரக அலுவலகத்தில் இருந்து மோப்பநாய்  டிக்ஸி வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய், மயில்கள் செத்துக்கிடந்த பகுதியில் இருந்து மோப்பம் பிடித்தபடி அந்த பகுதியில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டம் பகுதிக்கு ஓடிச்சென்று நின்றது. மோப்பநாயை பின் தொடர்ந்து வனத்துறையினரும் சென்றனர். அப்போது அங்குள்ள தக்காளி செடி அருகே மயில் ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதையடுத்து அந்த மயிலை மீட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் செத்துக்கிடந்த 35 மயில்களையும் குழிதோண்டி அதில் போட்டு தீவைத்து எரித்தனர். 
விவசாயி கைது
இதையடுத்து தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் உகாயனூர் ஊராட்சி பகுதியில் உள்ள பொல்லிகாளி பாளையத்தை சேர்ந்த விவசாயி பண்ணாரி (வயது 47) என்பவரை அழைத்து சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர் விசாரித்தனர். இதற்கிடையில் மயில்கள் செத்ததற்கான மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பண்ணாரியை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 
விசாரணையில் தோட்டத்தில் அதிக அளவில் மயில்கள் வந்து தக்காளி பழங்களையும், விதைகளையும் தின்றுவிட்டு சென்றுள்ளது. இதன்காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் உணவில் விஷம் கலந்து பண்ணாரி போட்டதால் அவற்றை தின்ற மயில்கள் அங்கேயே மயங்கி விழுந்து செத்ததும் தெரியவந்தது. 
உள்ளிருப்பு போராட்டம்
இதற்கிடையில் பண்ணாரி மீது பொய் வழக்கு போட்டு அவரை வனத்துறையினர் கைது செய்து விட்டதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் செவந்தாம்பாளையத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பண்ணாரியின் உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று காலையில் தொடங்கிய போராட்டம் இரவு 7 மணிவரை நடந்தது. 
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதால் தான் பண்ணாரியை கைது செய்துள்ளதாக விரிவான விளக்கம் அளித்தனர். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்