விளைநிலங்களில் புகுந்து 14 காட்டு யானைகள் அட்டகாசம்
சக்லேஷ்புரா அருகே விளைநிலங்களில் புகுந்து 14 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அப்போது காட்டு யானை ஒன்று சாலையில் வந்த காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாசன்: சக்லேஷ்புரா அருகே விளைநிலங்களில் புகுந்து 14 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அப்போது காட்டு யானை ஒன்று சாலையில் வந்த காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானைகள் அட்டகாசம்
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா மாசுவனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து புலி, சிறுத்தை, காட்டு யானைகள் வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பீதியடைந்துள்ள கிராம மக்கள் தங்களின் தோட்டங்களுக்கு செல்லவே பயந்தனர். இதனால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
மேலும், தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று கிராம மக்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
விரட்டியடிக்க முயற்சி
இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் வெளியேறின. அந்த காட்டு யானைகள் மாசுவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெகநாத் என்பவருக்கு சொந்தமான விளைநிலங்களில் புகுந்தன. அவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த காபி செடிகளை மிதித்தும், பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்தின. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும், பட்டாசு வெடித்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த காட்டு யானைகள் தனித்தனியாக பிரிந்து அங்கிருந்து ஓடின. சில காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. சில யானைகள் பக்கத்து கிராமத்துக்கு சென்றுவிட்டன.
காரை வழிமறித்தது
இதனால் கிராம மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் பதுங்கி கொண்டனர். வனத்துறையினர் விரட்டியடித்ததில் ஒரு காட்டு யானை, அருகே உள்ள ஹசிடி கிராம பகுதிக்கு சென்றது. அந்த கிராமத்தின் சாலையில் காட்டு யானை உலா வந்தது. அந்த சமயத்தில் ஹசிடி கிராமத்தின் சாலையில் ஒரு கார் வந்தது. அந்த காரை வழிமறித்து காட்டு யானை தாக்க முயன்றது. இதனால் சுதாரித்து கொண்ட கார் டிரைவர், வேகமாக சென்றுவிட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த யானையும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.