வாலாங்குளத்தில் நீர் மேடை மீது குவியும் பொதுமக்கள்
கோவை வாலாங்குளத்தில் நீர் மேடை மீது பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். தடுப்புகள் இல்லாததால் குளத்தில் விழும் அபாயநிலை உள்ளது.
கோவை
கோவை வாலாங்குளத்தில் நீர் மேடை மீது பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். தடுப்புகள் இல்லாததால் குளத்தில் விழும் அபாயநிலை உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி பணி
கோவையில் உள்ள குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வாலாங்குளத்தில் நீர்மேடை மற்றும் அலங்கார வளைவுகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பொதுமக்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களில் குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உக்கடம் பெரிய குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் வாலாங்குளக்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
நீர்மேடையில் தடுப்பு இல்லை
வாலாங்குளத்தின் மீது நீர்மேடை அமைக்கப்பட்டு பொதுமக்கள் படகுசவாரி செய்வதற்கு வசதியாக செய்யப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் நீர்மேடையில் நின்று குளத்தை ரசித்தனர்.
தடுப்புகள் இல்லாததால் குளத்தில் சிறுவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. இதுதவிர சிலர் தங்களுடைய குழந்தையை கையில் தூக்கியபடி தண்ணீருக்குள் விட்டு விளையாடினார்கள். ஆபத்தை உணராமல் இவ்வாறு விளையாடுவதால் விபரீதம் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நீர்மேடையில் தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.