17 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் அனைத்து வாசல்களும் திறப்பு
நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து வாசல்களும் நேற்று திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து வாசல்களும் நேற்று திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லையப்பர் கோவில்
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயம் நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆகும். பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் நெல்லையப்பர் கோவிலை இந்த மாவட்ட பக்தர்கள் தங்களின் அடையாளமாக கருதி வருகின்றனர். தினமும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்கிறார்கள்.
மற்ற சிவன் கோவில்களை போன்றே நெல்லையப்பர் கோவிலிலும் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என 4 திசைகளிலும் வாசல் கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாசல்கள் மூடல்
இந்த சூழ்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு நெல்லையப்பர் கோவில் வடக்குப்புற வாசல் அருகே ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அன்றிலிருந்து கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் மூடப்பட்டது. அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கடந்த 17 ஆண்டுகளாக அந்த வாசல் கதவுகள் பூட்டியே கிடந்தது. முக்கிய திருவிழா நேரங்களில் மட்டும் வடக்கு, மேற்கு ஆகிய 2 கோபுரங்களின் கீழ் உள்ள வாசல் கதவுகள் திறக்கப்படும். திருவிழா முடிந்த மறுநாள் கதவுகள் மீண்டும் மூடப்பட்டு விடும்.
அமைச்சர் உத்தரவு
இந்த நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமீபத்தில் நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சார்பில் கோவிலில் பூட்டிக்கிடக்கும் வாசல்களை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் அங்கு ஆய்வு நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவை தொடர்ந்து அனைத்து வாசல் கதவுகளையும் திறக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். கோவிலின் மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்களில் உடனடியாக பரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
வாசல்கள் மீண்டும் திறப்பு
இந்த நிலையில் நேற்று வடக்கு, தெற்கு, மேற்கு வாசல் கதவுகள் திறக்கப்பட்டன. முன்னதாக கோவில் யானை காந்திமதி வரவழைக்கப்பட்டு கஜபூஜை நடத்தப்பட்டது. பின்னர் 3 வாசல் கதவுகளுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பித்து கதவுகள் திறக்கப்பட்டன.
17 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் நான்கு வாசல் கதவுகளும் திறக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அந்த வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது புதுமண தம்பதியும் புதிய வாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதையொட்டி கோவிலில் மீண்டும் திறக்கப்பட்டு உள்ள நுழைவு வாசல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர்.
கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் கொரோனா நடைமுறையை பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் 4 திசை வாசல்களும் திறக்கப்படும் நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் ராமராஜ் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.