உளுந்தூர்பேட்டை அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கழுத்தை நெரித்து கொலை
உளுந்தூர்பேட்டை அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
உளுந்தூர்பேட்டை
கட்டிட தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா(வயது 32). கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு காவ்யா(15), கசிதா(13) என்ற 2 மகள்களும், கமலேஷ்(11) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை வெண்ணிலா பக்கத்து ஊரான பண்ருட்டிக்கு வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்ததும் தனியார் பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ் பெரியப்பட்டு கிராமத்தில் நிற்காததால் அருகே உள்ள தேவியானந்தல் கிராமத்தில் இறங்கிய வெண்ணிலா, அவரது கணவருக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார்.
ஓடையில் மயங்கி கிடந்தார்
இதையடுத்து மனைவியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் பஸ் நிறுத்தத்துக்கு வந்த கணபதி அங்கே மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது பஸ் நிறுத்தத்தில் இருந்து 100 அடி தொலைவில் சாலையோரத்தில் வெண்ணிலாவின் செல்போன் ஒலித்துக்கொண்டிருந்தது.
உடனே கணபதி அந்த செல்போனை எடுத்துக்கொண்டு அந்த பகுதியில் தேடிப்பார்த்தார். அப்போது அங்குள்ள ஓடையில் வெண்ணிலா மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
பரிதாப சாவு
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநாவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே வெண்ணிலா இறந்துவிட்டதாக கூறினர்.
வெண்ணிலாவின் கழுத்தில் காயம் இருந்ததால் அவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் விரைந்து வந்து வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசில் சரண் அடைந்தார்
இதற்கிடையில் வெண்ணிலாவை கொலை செயத்தாக கூறி சிறுளாப்பட்டு காலனியை சேர்ந்த ஆறுமுகம்(45) என்பவர் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது அவர் போலீசிடம் கூறுகையில், தேவியானந்தல் கிராம பஸ் நிறுத்தத்தில் மது போதையில் இருந்தபோது அந்த வழியாக தனியாக நடந்து சென்ற வெண்ணிலாவை ஆசைக்கு இணங்குமாறு அழைத்தேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து ஓடினார். அவரை நான் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்து வெண்ணிலாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டேன் என்று கூறினார்.
இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.
உறவினர்கள் மறியல்
இதற்கிடையே வெண்ணிலா கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், தாயை இழந்து தவிக்கும் அவரது குழந்தைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கூறி வெண்ணிலாவின் உறவினர்கள் கடலூர்-கெடிலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்று அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக கடலூர்-கெடிலம் இடையே சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.