கிணற்றில் தவறி விழுந்து விடிய, விடிய தவித்த தொழிலாளி

காட்பாடியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து விடிய, விடிய தவித்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Update: 2021-07-11 15:38 GMT
வேலூர்

காட்பாடியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து விடிய, விடிய தவித்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கிணற்றில் விழுந்த தொழிலாளி

வேலூர் மாவட்டம் காட்பாடி திருமணி பகுதியை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 45), கூலி தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் சம்பவத்தன்று இரவு குடும்ப பிரச்சினையில் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அமர்நாத் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அவர் போகும் வழியில் இருந்த 70 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். அமர்நாத்திற்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. அதனால் செய்வதறியாமல் திகைத்த அவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இரவு நேரம் என்பதால் யாரும் அங்கு வரவில்லை.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

அதையடுத்து அவர் தான் அணிந்திருந்த லுங்கியை கிணற்றில் இருந்த குழாயில் கட்டி இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே இருந்துள்ளார். விடிய, விடிய கிணற்றுக்குள் தவித்த அவரை யாரும் காப்பாற்றவில்லை. 

மறுநாள் காலையில் அமர்நாத் மீண்டும் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். அவரின் சத்தத்தை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கேட்டு கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தனர்.

அங்கு அமர்நாத் கிணற்றுக்குள் விழுந்து மேலே வரமுடியாமல் தவித்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் காட்பாடி தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்று கிணற்றில் இறங்கி கயிறு கட்டி அமர்நாத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி அளித்து வீட்டில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்