கொட்டும் மழையில் குவிந்த மக்கள் போக்குவரத்து பாதிப்பு
கொட்டும் மழையில் குவிந்த மக்கள் போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை
தமிழக அரசின் தளர்வுகளுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமை நேற்று என்பதால் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
குறிப்பாக வால்பாறை பகுதியில் சந்தை நாள் நேற்று என்பதாலும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைத்த வாரம் என்பதாலும், பல மாதங்களுக்கு பிறகு கிறிஸ்தவ தேவாலயங்கள் திறக்கப்பட்டு கொரோனா நெரிமுறைகளை பின்பற்றி வழிபாடுகள் நடைபெற்றதாலும்,சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகை ஏற்பட்டதாலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்துக்கொண்டு வால்பாறை நகர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வால்பாறை நகரில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் அதிகப்படியான தனியார் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள, அரசு பஸ்கள் என்று நகர் பகுதியில் அதிகளவிலான வாகனங்களின் இயக்கம் இருந்ததால் வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரே பணியில் ஈடுபட்டு இருந்ததால் போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படாமல் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்து பாதிப்பு போதும்,போதும் என்ற நிலையில் காணப்பட்டது.
மேலும் வால்பாறை நகர் பகுதிக்கு நேற்று வந்திருந்த பொது மக்கள் யாருக்குமே கொரோனா தொற்று குறித்த அச்சமில்லாமல் இருந்தது.
எந்தவித சமூக இடைவெளியையும் அவர்கள் கடைபிடிக்க வில்லை. பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் சென்றனர்.
இதனால் வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று பரவுவதற்கான சூழ்நிலை காணப்பட்டது.