பெண் வியாபாரியை தாக்கி 8 பவுன் சங்கிலி பறிப்பு
ஆம்பூர் அருகே பட்டப்பகலில் பெண் வியாபாரியை தாக்கி 8 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே பட்டப்பகலில் பெண் வியாபாரியை தாக்கி 8 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பள்ளித்தெருவை சேர்ந்தவர் சம்பத். இவரின் மனைவி அலமேலு (வயது 46). வியாபாரியான அவர் தனது வீட்டின் அருகே மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
அவர், இன்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் வாடிக்கையாளர் போல் நடித்து பொருட்கள் சிலவற்றை கேட்டுள்ளார்.
அந்தப் பொருட்களை எடுக்க அலமேலு முயன்றபோது, அந்த மர்மநபர் மக்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்து திடீரென அலமேலுவின் முகத்தில் ஓங்கி தாக்கி உள்ளார். அதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார்.
உடனே மர்மநபர் துணிச்சலுடன் அலமேலுவின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.
சுதாரித்து எழுந்த அலமேலு கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார். அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். எனினும், அவர்கள் மர்மநபரை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து உமராபாத் போலீசில் அலமேலு புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த நகை பறிப்பு சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.