வேதாரண்யம் அருகே இடப்பிரச்சினையில் முதியவருக்கு அரிவாள் வெட்டு - தம்பி உள்பட 2 பேர் கைது
வேதாரண்யம் அருகே இடப்பிரச்சினையில் முதியவரை அரிவாளால் வெட்டிய தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வேதாரண்யம்,
வேதாரண்யத்தை அடுத்த கையிலவானம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது80), இவருடைய தம்பி தங்கராசு(76). இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று கோதண்டபாணிக்கும் அவரது தம்பி தங்கராசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு தங்கராசு மகன் கார்த்தி(26), மனைவி ஜோதி ஆகிய 2 பேரும் வந்துள்ளனர். பின்னர் தங்கராசு அவரது மகன், மனைவி ஆகிய 3 பேரும் சேர்ந்து கோதண்டபாணியை தரக்குறைவாக திட்டி அரிவாளால் வெட்டினர்.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராசு, கார்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.